RSS

சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்க

‘சிறுநீரகத்தில், சிறுநீரிலுள்ள உப்புகள் ஒன்று திரண்டு பல்வேறு காரணங்களினால் சிறுநீர்ப்பாதையில் பல்வேறு அளவுள்ள கற்கள் உருவாகக்கூடும். முக்கியமாக கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால் இவை உருவாகின்றன. யூரேட் அல்லது அபூர்வமாக சிஸ்டீன் கற்கள் தோன்றலாம்.

நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு பரம்பரையாக வருகிறது. சிறுநீரகக் கல் மிகச்சிறிய துகள் அளவில் இருந்து மிகப்பெரியளவு அதாவது பிறந்த குழந்தையின் தலையளவு கூட வளரும். இவை சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுத்தாதவரை, வெளியில் அறிகுறிகள் தென்படாது. கற்களின் வெளிபரப்பு முட்கள் போல் இருந்தால் நீர் பாதையின் உள்வரிப்படலமான சவ்வுப்படலத்தில் உராய்ந்து சிறுநீரில் ரத்தம் வெளிவரும். கண்ணுக்குத் தெரியும் அளவில் சிறுநீர் ரத்த சிவப்பாக இருக்கும் அல்லது சிறுநீரை பரிசோதனை செய்யும் போது ரத்தச் சிவப்பணுக்கள் மிகுதியாகக் தென்படும். வயிற்று வலியோடு இந்த அறிகுறியும் இருந்தால் சிறுநீரக கல் உருவாகி உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

சிறுநீர் தொற்றும் ஏற்படும். கீழ்புற நீர்ப்பாதையில் தொற்று காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வும், எரிச்சலும், அடிவயிற்று வலி, காய்ச்சல் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது அவசியம். மேலும் கற்கள் நீர்பாதையை அடைக்கும் போது சிறுநீரகத்தில் நீர் வீக்கம் உண்டாகும். அப்போது வயிற்றில் கட்டி இருப்பது போல் உணரலாம். அறிகுறி இல்லாத நாள்பட்ட சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரின்மை உருவாகும்.

சிகிச்சை முறை: சிறுநீர் குழாயில் கீழ்ப்பகுதியில் காணப்படும் 4 மி.மீ. அளவை விட சிறிய கற்களில் 90 சதவீதம் தானாக வெளியேறி விடுகின்றன. அளவு 6 மி.மீ.க்கு மேல் இருந்தால் 20 சதவீதம் மட்டுமே தானாக வெளியேறும். நோயாளிகள் தாராளமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் வெளியேறி, அதன் மூலம் கற்களும் வெளியேறி விடும். வாழைத்தண்டு அல்லது மாற்று மருந்துகள் சிறுநீர் பெருக்கியாக செயல்படுகின்றன. வலி மிகுதியாக இருப்பின் டாக்டரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ளலாம்.

பெரிய கற்கள் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தும் போது அறுவை சிகிச்சை தேவைப்படும். தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீரக நீக்கம் தேவைப்படும். பகுதியளவு பாதிக்கப்பட்டிருந்தால் பகுதி நீக்கம் செய்ய வேண்டும். சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இல்லாதவர்களுக்கு லேப்ராஸ்கோபி முறையில் கற்கள் மட்டும் பொடியாக்கப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படும். இந்த கற்களை பரிசோதித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

பாட்டி வைத்தியம்

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.

வெயில் காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.

அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.

வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.

புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

டயட்

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க சாப்பிட மற்றும் குறைக்க வேண்டிய உணவுகள் பற்றி உணவு ஆலோசகர் ஜெயந்தி கூறியதாவது: பால், பால்பொருட்களை குறைந்தது ஒரு நாளைக்கு 300 மி.லி கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். தானியங்களில் கம்பு தவிர மற்ற தானியங்கள், பருப்பு வகைகளில் கடலைப்பருப்பு, உளுந்து, பாசிப்பயறு, பாசிபருப்பு, உலர்ந்த பட்டாணி சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட், வெங்காயம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளை முள்ளங்கி, பாகற்காய், அவரைக்காய், சவ்சவ், கொத்தவரங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், மாங்காய், பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், அன்னாசிப்பழம், ஆப்பிள், பப்பாளி, பிளம்ஸ், வாழைப்பழம், எலுமிச்சை, தர்பூசணி, பேரிக்காய் போன்ற காய்கறி, கிழங்கு மற்றும் பழ வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு படுக்க செல்லும் முன்னரும் தூக்கத்தில் எழுந்தும் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆட்டு இறைச்சியை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். கோழி மற்றும் மீன் கொஞ்சம் சாப்பிடலாம். இரவில் ஒருமுறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும்.

குறைத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்: காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கத்தரிக்காய், பசலைக்கீரை, வெள்ளரி, முருங்கைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட், கருணைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு, திராட்சை, கொய்யா, நெல்லி, பலா, நாவற்பழம், சீதாப்பழம், மாதுளை, மாம்பழம். சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் தவிர்க்க வேண்டும். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment