RSS

கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்

மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது.

தாய் உட்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்;ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென ஆயுர் வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது.

இந்தக் காலக்கட்டத்தில் தாய்க்கு திரவ உணவுகள் மற்றும் பழங்கள் பரிந் துரைக்கப்படுகிறது. இது கரு வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆகவே, திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன எடுத்துக் கொள்ளவேண்டும்.

முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தேன் மற்றும் நெய் இவற்றுடன் கலந்து கொடுக்க வேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

இக்காலத்தில் சிசுவின் உடலில் சினைப்பகுதிகளான கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சியும் நடைபெறும். இந்த மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய்யை ஆயுர் வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும் ஒரே உணவாக அமைகிறது. இந்த காலங்களில் இவர்கள் சில உணவுப்பொருட்களை விருப்பப்பட்டு கேட்க நேரும். நாம் அதை பூர்த்தி செய்யவேண்டும். அதே நேரத்தில் தேவையற்ற உடல் பருமனை தவிர்க்க உணவு கட்டுப்பாடு முக்கியமானதாகும்.

இக்காலக்கட்டத்தில் சிசுவுக்கு தொப்புள் கொடியின் வழியாக ஆகாரம் கிடைக்கிறது. அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சிறந்த உணவுகளாகும்.

இந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருள்களான அஸ்வகந்தா, கிரான்ச், சிந்தில் கொடி ஆகியவை தசைகளுக்கு பலமாகவும், கருவிற்கு சிறந்த போஷாக் காகவும் அமைகிறது.

கொழுப்பு உப்பு மற்றும் நீரைச்சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துளசியை உட் கொண்டால் பிரசவ வலி குறையும்.

ஆயுர்வேதம் பிரசவ காலத்தில் சிசு வளர்ச்சிக்கும், தாயின் உடல்நலத்திற்கும் சில மருந்துப் பொருட்களை உண்ணுமாறு அறிவுறுத்துகிறது. அவற்றை ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

ஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment