RSS

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை

காலையில் எழுந்ததும் காபி குடிப்பதையே நாம் வழக்கமாக கொண்டிருப்போம்.

பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும்.

மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும்.

முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை

தண்ணீர்

ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.

தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும்.

வெந்தயத் தண்ணீர்

வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.

வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

அருகம்புல் சாறு

அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான்.

அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது.

வெள்ளைப்பூசணி சாறு

வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும்.

கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும்.

ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.

நெல்லிக்காய்ச் சாறு

தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில் 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment