RSS

தக்காளி

தக்காளி இல்லாத சமையலா, அது ருசிக்காது என்பது பலரது கருத்து. தக்காளி இல்லாமல் பெரும்பாலான பெண்கள் சமையல் செய்வது இல்லை என்பதும் உண்மை. சமையலில் காயாகவும் பழமாகவும் பயன்படுகிறது இந்த தக்காளி. இது ஒரு காய்கறி செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ அல்லது நிழல்சேர் செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இது அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் என்று அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் தென் அமெரிக்கா. குறிப்பாக பெரு, மெக்சிகோவில் இருந்து அர்ஜெண்டினா வரையான பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

மெக்சிகோவில், அஸ்டெக் இனத்தவர் உணவுக்காக தக்காளியை பயிரிட்டனர். அந்நாட்டைக் கைப்பற்றிய ஸ்பானிய வெற்றி வீரர்கள் 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை ஸ்பெயினுக்கு கொண்டு வந்தனர். நாவாட்டில் என்ற மொழியில் டாமாட்டில் எனப்படும் வார்த்தையைக் கடன் வாங்கி இதை டாமாடே என்று அழைத்தனர். விரைவில், இத்தாலி, வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்த ஸ்பானிய குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த புதிய சுவையை ருசிக்க ஆரம்பித்தனர்.

அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், வட ஐரோப்பாவிற்கு தக்காளி அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அது நச்சுத்தன்மையுள்ளதென்று கருதப்பட்டதால், தோட்டத்தில் அலங்கார செடியாக வளர்க்கப்பட்டது. இரவில் மலர்கிற ஒரு செடியாக, அதிக வாசனையுள்ள இலைகளையும் நச்சுத்தன்மையுள்ள தண்டுகளையும் கொண்ட ஒரு செடியாக இது இருந்தது. என்றாலும், அதன் பழத்தில் எவ்வித ஆபத்தும் இல்லைஎன்பது நிரூபிக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட தக்காளிகள் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இத்தாலியர்கள் அதை போமோடோரோ (தங்க ஆப்பிள்) என்றழைத்தனர்.

ஆங்கிலேயர் முதலில் அதை டொமாட்டே என்றும் பின்னர் அதை டொமாட்டோ என்றும் அழைத்தனர். ஆனால் லவ் ஆப்பிள் என்ற பெயரும் அதிக பிரபலமானது. ஐரோப்பாவிலிருந்து அட்லாண்டிக் வழியாகத் திரும்பவும் வட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட தக்காளி, 19ம் நூற்றாண்டில் அவ்விடத்தின் முக்கிய உணவாக ஆனது.

தக்காளியின் பயன்கள்

தக்காளியில் வைட்டமின் ஏ, சி, ஈ மட்டுமல்லாமல், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. புற்றுநோய், இருதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கப்படுவதைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தக்காளியில் நிறைய உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தக்காளியில் 93 முதல் 95 சதவீதம் வரை தண்ணீரே உள்ளது. தங்கள் எடையைக் குறித்து அக்கறையுள்ளவர்கள் தக்காளியில் கலோரிகள் மிகக் குறைவு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தக்காளி சாறு

நன்கு பழுத்த தக்காளிப் பழத்தை சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. சிறுநீர் எரிச்சல், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றை குணமாக்கவும் தக்காளி சாறு சிறந்ததாகும். இந்நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களை சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும். நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும்.

உடல் பருமன் குறையும்

100 கிராம் தக்காளிப் பழத்தில் 20 கலோரி தான் உள்ளது. எனவே, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் காலையில் பழுத்த இரு தக்காளிப் பழங்களை சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படி சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். இதற்கு முக்கிய காரணம், அதில் மாவு சத்து குறைவாய் இருப்ப துதான். அத்துடன் உடலுக்கு தேவையான தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகிறது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்கலாம். தக்காளி உடலில் உள்ள நோய்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் தற்போது விரும்பி பருகப்படும் பானங்களுள் தக்காளி சாறும் ஒன்றாய் இருக்கிறது. தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

பார்வை கோளாறு நீங்கும்

இரவு நேரத்தில் பார்வை சரியாக தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். தக்காளி செடியின் இலைகளை பறித்த உடன் 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும். செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகர் கலந்து மார்பு மீது வைத்துக் கட்டி வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

காய்ச்சல், பித்த வாந்தியை போக்கும்

காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியவை தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தக்காளிச் சாற்றை அருந்த வேண்டும்.

ஆஸ்துமாவை குணமாக்கும்

காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன. இரவில் படுக்க போகும்போது ஒரு டம்ளர் தக்காளி சாறுடன் அதில் தலா ஒரு தேக்கரண்டி தேனும், ஏலக்காய்த் தூளும் கலக்க வேண்டும். முதலில் மூன்று உரித்த வெள்ளைப்பூண்டுகளை (மூன்று பற்கள்) மாத்திரை போல தண்ணீர் மூலம் விழுங்க வேண்டும். பிறகு தக்காளி சாற்றை அருந்த வேண்டும். மேற்கண்ட மூன்று வகை நோயாளிகளுக்கும் மிக உயர்ந்த பயனை அளிக்கும் சிகிச்சை முறையாகும்.

சளி முற்றிலும் அகன்றுவிடும். அதனால் இவர்கள் குணமாகி வருவதும் கண்கூடாய்த் தெரியும். தக்காளியைப் பழமாக சாப்பிட்டாலும் சாறாக சாப்பிட்டாலும் உடனே உடலில் கலந்துவிடும். இதனால் சக்தியும் கிடைக்கும்; சாப்பிட்ட மற்ற உணவுகளும் உடனே செரிமானம் ஆகிவிடும். இந்தக் காரணத்தால்தான் பெரிய ஓட்டல்களில் முதலில் தக்காளி சூப் தருகிறார்கள். பலமான விருந்தை ருசித்து சாப்பிட, ஏற்கனவே வயிற்றில் உள்ளதையும் இது ஜீரணிக்க செய்துவிடும். அத்துடன் இது உடனே உடலால் கிரகித்துக் கொள்ளப்படுவதால் வயிறு நிரம்பிவிடும்.

எனவே உணவைக் குறவாகவே உண்ணுவார்கள். அதாவது வயிற்றில் பாதியை தக்காளி ரசம் அடைத்துக் கொள்வதால் மிகுதியாக சாப்பிட முடியாது. பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லது. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு தக்காளி சூப் மிகவும் நல்லது. தக்காளியில் உள்ள இரும்பு சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்து விடுகிறது. இதனால் ரத்த சோகை நோயாளிகள் விரைவில் குணமாவார்கள். இவர்கள் தக்காளி சாறு இரண்டு அல்லது மூன்று முறை தினமும் அருந்த வேண்டும். ஒரு வேளைக்கு ஒரு டம்ளர் சாறு போதும்.

பார்வை நரம்புகள் பலம் பெறும்

வெண்ணெயில் உள்ளதைவிட அதிக அளவு விட்டமின் ஏ தக்காளிப் பழங்களில் இருக்கிறது. அதனால் கண் பார்வை கோளாறுகளுக்கும், உடல் பலவீனத்துக்கும் தக்காளி பழத்தையும், தக்காளி சாற்றையும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment