அனைவரும், தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மலச்சிக்கல் வராமல் இருந்திருக்க மாட்டார்கள். மலச் சிக்கலுடனேயே பலர் வாழ்கின்றனர்.
மலச்சிக்கல் மலம் கழிப்பதில் ஏற்படும் கோளாறு. ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழித்தல் இயற்கையானது. மலச்சிக்கல் ஏற்பட்டால் ஒன்று வெளியேறும் மலத்தின் அளவு குறையும். இரண்டாவது பல நாட்களுக்கு மலமே வெளியேறாது. அதுவும் மலம் கழிக்க சிரமப்பட வேண்டியிருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்போதும் வயிறு (மலக்குடல்) நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும். உடலில் பல நாள் கழிவுப் பொருட்கள் தேங்கியிருப்பது ஒரு வித சங்கடத்தை உண்டாக்கும். நாள்பட்ட மலச்சிக்கல் பல கோளாறுகளை உண்டாக்கும்.
மலச்சிக்கல், வயிற்று வலியை உண்டாக்கலாம். மலம் கெட்டிப்பட்டு போவதால் அது வெளியேற கஷ்டமாக இருக்கும். இதனால் வயிற்று வலி உண்டாகும். வாந்தியை உண்டாக்கலாம். பசி இருக்காது. ஜீரண மண்டலத்தில் கடைசி அங்கங்களான மலக்குடல், பெருங்குடலின் மலம் கெட்டிப்பட்டு இறுகி விடும். மலப்பாதையை அடைத்து கொண்டு விடுவதால், மேலும் வரும் மலம் வெளியேற முடியாமல் நின்று விடும். இதனால் தசை இழுப்பு, சுளுக்கு, வலி ஏற்படலாம்.
மலச்சிக்கல் ஒர் உயிர்க்கொல்லி நோயல்ல. அதனால் எப்போதாகிலும் மலம் கழியாது போகுமானாலும், அளவில் குறைந்து கழியுமானாலும் அதற்காக பயப்பட வேண்டிய தேவையில்லை. மேலும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மலம் கழியாது இருந்த பின்னர் கழிக்கின்ற போது மலம் அளவில் மிகுந்து இருக்குமெனவும் எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் உணவின் சக்கை, மலக் குடலிலே ஒரிரு நாட்கள் இருக்க நேரிடும் போது, அதிலுள்ள நீர்ச் சத்து முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு விடுவதால், மலம் கெட்டிப்பட்டுப் போவதுடன் அளவிலும் குறைந்து விடுகிறது. எனவே இந்த விஷயம் உங்கள் மன அமைதியைப் பாதிக்க வேண்டிய அவசியமில்லை. கழிவு எதுவும் வெளியே வராமல் உள்ளேயே தங்கி இருக்கப் போவதுமில்லை. சேர்ந்தாற் போல் சில நாட்கள் கழிவறைக்குச் செல்லாமல் இருந்தால் கூடக் கவலையுறத் தேவையில்லை. ஆனால் எப்போதும் மலம் கழிப்பதில் சிக்கல் உள்ளவர்களுக்குத்தான் இது பொருந்தும். நாள்தோறும் நேரந்தவறாமல் கழிவறைக்குச் சென்று வருகின்ற ஒருவருக்கு இதுபோல் நேருமானால் அவர் தனது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதை உணர்ந்து மருத்துவரை நாடுதலே சரியாகும்.
மலச்சிக்கலுக்கான காரணங்கள்
1. உணவில், உணவின் கொள்ளளவை அதிகரிக்கும் நார்ச்சத்து இல்லாமை.
2. இயற்கையாக மலம் கழிக்கும் உணர்வு வந்தும், அதை அடக்கிக் கொள்ளுதல்.
கழிவுப் பொருட்கள் கோலோனிலிருந்து மலக்குடலுக்கு வந்து அதன் சீத சவ்வுடன் (Membrane) உராயும் போதே, கழிவறைக்கு செல்ல வேண்டுமென்ற உணர்வை மூளை தெரிவிக்கிறது. இந்த உணர்வை பொருட்படுத்தாமல் அடக்கிக் கொண்டே வந்தால், நாளடைவில் இவ்வுணர்வு தோன்றாமலே போய் விடும். பெருங்குடலின் தசை அசைவுகள் பெருமளவில் குறைந்தால் அது Colon Inertia (பெருங்குடல் மந்தம்) எனப்படும். இது தீராத மலச்சிக்கலை உருவாக்கும்.
3. உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை, குறிப்பாக வயதானவர்களுக்கு இது பொருந்தும்.
4. அமில எதிர்ப்பு (Antacid) மற்றும் மலமிளக்கி மருந்துகளும் காரணமாகலாம். அலுமினியம் ஹைட்ராக்ஸைட், மனதை சமனப்படுத்தும் மருந்துகள், அயச்சத்து மருந்துகள் இவை அடிக்கடி மலச்சிக்கலை உண்டாக்கும்.
5. பெருங்குடலுக்கு குறைந்த அளவு ரத்தம் பாய்ந்தால், கழிவை வெளியேற்றும் தசை அசைவுகள் பாதிக்கப்பட்டு மலச்சிக்கல் ஏற்படும்.
6. நீர்மச்சத்து குறைந்து போதல். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமலிருப்பதும் ஒரு காரணம். உடலில் நீர்ச்சத்து குறைந்தால், உடல் கழிவுப்பொருட்களிலிருந்து எல்லா நீரையும் உறிஞ்சிக் கொண்டு விடும்.
7. மலக்குடல் பாதிப்புகள்
8. பால் ஒவ்வாமை
9. அடிவயிறு மற்றும் குதத் தசைகளை கட்டுப்படுத்த முடியாமல் போதல். இதை Dyschezia என்பார்கள்.
10. மன இறுக்கம் (Stress), மனச்சோர்வு (Depression) போன்றவை தீவிர மலச்சிக்கலை உண்டாக்கும். மனநிலை கோளாறுகளால் வயிறு பாதிக்கப்படும். மூளையில் உள்ள செரோடினின் அளவு பாதிக்கப்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.
11. கீழ்க்கண்ட வியாதிகள் மலச்சிக்கலை உண்டாக்கும். இந்த வியாதிகளால் கழிவுப் பொருட்களின் கோலோன், மலக்குடல், குதம் இவற்றின் வழியே நடக்கும் பயணத்தை தாமதப்படுத்தும். பார்க்கின்சன்ஸ் நோய், குறைந்த தைராயிட் சுரப்பு, ரத்தத்தில் அதிக அளவு கால்சியம், நீரிழிவு, நரம்பு மற்றும் முதுகெலும்பு பாதிப்புகள்.
12. தவறான உணவு, வாழ்க்கை முறை.
அறிகுறிகள்
வயிற்று வலி ஏற்படும். பிரட்டல் ஏற்படலாம். பசி எடுக்காது. சிரமப்பட்டு மலம் கழிப்பதால் குதத்தின் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு மூலநோய் உண்டாகும். மலச்சிக்கலின் தீவிர பாதிப்பு மூலநோய்.
டைவர் டிகுலர் (Diverticular) வியாதி ஏற்படும். இறுகி, கல் போலான மலத்தால் பெருங்குடலின் சுவர்கள் பாதிக்கப்படும். இதனால் பெருங்குடலில் ‘பலூன்’ போன்ற ‘பைகள்’ உருவாகி வீக்கமும், அடைப்பும் ஏற்படும். இது தான் டைவர் டிகுலர் வியாதி.
ஆயுர்வேத சிகிச்சை அணுகுமுறை
ஆயுர்வேதத்தின்படி, ஒரு நாளில், அதாவது 24 மணி நேரத்தில் ஒரு தடவையாவது மலம் கழிக்காவிட்டால், அந்த கோளாறு மலச்சிக்கல்.
உணவு உண்ட நேரத்திலிருந்து 16 லிருந்து 24 மணி நேரத்துக்குள், அது ஜீரணமாகி, மீந்த கழிவு வெளியேற வேண்டும். கழிவை பெருங்குடல், மலக்குடலுக்கு ‘தள்ளி’ அது மலத்தை வெளியேற்ற வேண்டும். இந்த கழிவை “ஆமா” என்கிறது ஆயுர்வேதம். அனைத்து நோய்களின் காரணம் மலச்சிக்கலே என்று இயற்கை சிகிச்சை முறை கூறுகிறது. இயற்கையின் உந்துதல்களை ஆயுர்வேதம் ‘வேகம்’ என்கிறது. மலவேகம் தடைப்பட்டால் ஏற்படும் உபாதைகளை ஆயுர்வேதம் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது.
* கீழ்க்காலின் கெண்டச் சதையில் வலி ஏற்படும்.
* நீர்க்கோர்வை, ஜலதோஷம், தலைவலி அடிக்கடி ஏற்படும்.
* வயிற்றில் வாயு (gas) அதிகமாகி, மேல்வயிற்றில் ஏறி “உதர விதானத்தை” (Diaphragm) அழுத்தும். மார்பு வலி இருக்கும்.
* மலபந்தம், பார்வை மந்தம், பசியின்மை, வயிற்று வலி உண்டாகும்.
சிகிச்சை முறை
1. அத்திப்பழத்தை (உலர்ந்தவை) தண்ணீரில், இரவில் ஊறவைத்து, காலையில் உட்கொள்ளலாம்.
2. சாப்பிடும் முன்னும் அல்லது பின்னும் பப்பாளி பழத்தை உண்பது மலச்சிக்கலை கண்டிக்கும்.
3. காலையில் உப்பு சேர்த்த வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து குடிக்கலாம்.
4. காலையில் எழுந்திருப்பதற்கு ஒரு மணி முன்பாக விழித்து, 1 – 2 கப் உப்பு கலந்த வெந்நீரை குடித்து மீண்டும் படுக்கச் செல்லவும். இது சுலபமாக மலம் கழிக்க உதவும்.
5. காரட் ஜுஸ்ஸடன் பசலைக் கீரை ஜுஸ், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழ சாறும் சேர்த்து பருகினால் மலச்சிக்கல் நீங்கும்.
உணவின் மூலம்
1. கோதுமை ரொட்டிகளை உண்ணவும். அரிசி உணவை குறைக்க வேண்டும்.
2. நிறைய பச்சை காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு இயற்கையான நல்ல உணவு மருந்து.
3. நிறைய தண்ணீர் குடிக்கவும்.
4. பொரித்த உணவுகளை தவிர்க்கவும்.
5. வாத பிரகிருதிகளுக்கு நெய்யும், எண்ணையும் நன்மை செய்யும். பெருங்குடலுக்கு எண்ணை பசையை அளித்து, மலம் நகர உதவும்.
6. ஒதுக்க வேண்டிய உணவுகள் / – ‘பாட்டில்’ பானங்கள், ஜாம், பிரெட், ஐஸ்கிரீம், ஊறுகாய், அப்பளம், சீஸ், ‘சமோசா’ இவைகளை குறைக்கவும்.
7. சேர்க்க வேண்டியவை:- முழுகோதுமை, பாலிஷ் செய்யப்படாத அரிசி உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை. பீன்ஸ், முள்ளங்கி, கேரட், காலிஃப்ளவர், முட்டைகோஸ், வெங்காயம், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள்.
8. ஜீரகம், மிளகு, மஞ்சள், தனியா, பெருங்காயம் – இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
9. உணவை வாயில் அதிகமாக மென்று அரைத்தால் ஜீரணமாவது சுலபம்
10. காலை உணவை தவிர்க்க வேண்டாம்.
மூலிகைகள்
ஆயுர்வேதம் கிட்டத்தட்ட 600 மூலிகைகளை பரிந்துரைக்கிறது. மலச்சிக்கலுக்கு விரிவான வைத்தியம் ஆயுர்வேதத்தில் கிடைக்கும். நீங்களாகவே வைத்தியம் செய்து கொள்ளாமல் ஆயுர்வேத வைத்தியரை அணுகவும்.
இதோ சில மூலிகைகள்.
1. வில்வம் (Aegle marmelos) பொதுவாக பழங்கள் மலச்சிக்கலை தவிர்க்க உதவும். அவற்றில் சிறந்தது வில்வபழம். நல்ல மலமிளக்கி. காயை விட பழுத்த பழம் ஏற்றது. குடல்களை கழுவும். 2-3 மாதங்கள் உபயோகிக்க வேண்டும். ஒரு நாளுக்கு 60 கிராம் பழம் போதுமானது. சாப்பிடும் முன் எடுத்துக் கொள்ளலாம்.
2. சரக்கொன்றை, கொன்னை (Cassia Fistula) கொன்னை மரத்தின் பழக்கதுப்பு மலச்சிக்கலை குறைக்கும் மலமிளக்கி. பக்க விளைவுகள் இல்லாதது.
3. ஆமணக்கு (Ricinus Communis) பழங்காலத்தில் நம் வீடுகளில் கடைப்பிடித்த விளக்கெண்ணை மருத்துவம். பாதுகாப்பானது.
4. கடுக்காய் (Terminala Chebula) இது ஒரு குறைந்த வீர்யம் கொண்ட மிருதுவான மலமிளக்கி. இதன் கதுப்பை கல் உப்பு, அல்லது இலவங்கம், கிராம்பு (சிறிய அளவில்) இவற்றுடன் உண்ண வேண்டும்.
0 comments:
Post a Comment